தமிழர் களறி

தமிழர் களறி எனும் தமிழர் ஆவணக்காப்பகமும் வரலாற்று நூலகம் அறிமுகம்

Geschrieben von Super User. Veröffentlicht in தமிழர் களறி

அன்புடையீர் வணக்கம்,

சுவிற்சர்லாந்து நாட்டு பேர்ன் நகரில் அமைந்திருக்கும் சைவநெறிக்கூடம் எனும் அமைப்பு ஆரம்பித்துள்ள தமிழர் களறி எனும் தமிழர் ஆவணக்காப்பகமும் வரலாற்று நூலகமும் (Tamils History Library and Archives) அமைக்கும் முன்னெடுப்புக் குறித்தான ஓர் அறிமுகத்தை உருவாக்கவும் அதற்கான உங்கள் ஆதரவையும் வேண்டிநிற்கின்றோம்.


சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ன் நகரில் 1994ம் ஆண்டு இளவயதினரால் நிறுவப்பட்ட மன்றம் ஆகும். எமது நோக்கம் "செந்தமிழ்த் திருமறையில் கருவறையில் தெய்வத் தமிழ் வழிபாடு" என்பதாகும். சைவநெறிக்கூடம் தமிழின அடையாளங்களும் தமிழர் பண்பாட்டு வாழ்வியலின்  ஆதாரங்களாகவும் அமைந்திருக்கும் மொழி, இனம், இறைமை ஆகியவற்றை முன்னிறுத்தி தனது தமிழ்ப் பணிகளை ஆற்றிவருகின்றது.


சைவநெறிக்கூடத்தின் ஞனாலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைந்திருக்கும் கட்டடத்தின் ஒருபகுதி இவ் ஆணக்;காப்பகமும் நூலகமும் அமைக்க பொருத்தமான இடமாகவும் அமைந்துள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டின் பல்சமய இல்லத்தில் (Die Haus der Religionen/House of Religions, http://www.haus-der-religionen.ch/archiv/en/info) நாங்கள் பங்காளராக இருப்பதன் காரணத்தால் நாளும் சுவிஸ் நாட்டவர்களும், பிற இனத்தவர்களும் வந்துசெல்லும் ஒரு நடுவமாக ஐரோப்பாத்திடல் விளங்குகின்றது. சுவிற்சர்லாந்து நாட்டினதும் ஐரோப்பிய நாடுகளினதும் இறையியல், மெய்யியல், உள ஆன்ம ஆற்றுகை (theology, spiritual welfare and palliative care) தொடர்பான பல்கலைக்கழக ஆய்வு மையங்களுடனும் பல்வேறு செயற்திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றது


அவுஸ்திரேலியா தெற்காசியவியல் மையத்தின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் திரு. முருகர் குணசிங்கம் அவர்கள் எமது தேசியத்தலைவரால் பணிக்கப்பட்ட பணிக்காக தன்னுடைய பேராசிரியர் பணிக்காலத்திலும், 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலும் உலகெங்கும் சென்று தேடிச் சேர்த்த முப்பது இலட்சங்களுக்கும் மேற்பட்ட தமிழர்களின் வரலாற்று ஆவணத்தை தனது தென்னாசியவியல் மையம் சிட்டினி எனும் அமைப்பு ஊடாக எமக்குக்குப் பயன்பாட்டு உரிமையுடன் வழங்க முன்வந்துள்ளார். இவ்வாவணங்கள் இலங்கை, இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலுள்ள ஆவணக்காப்பகங்களிலும் நூலகங்களிலும் பல்கலைக்கழக ஆய்வு நடுவங்களிலுமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை இவர் தேடிச் சேர்த்த மூல ஆவணங்களை உசாத்துணையாகக்கொண்டு 7 நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார். மேலும் துறைசார்ந்த கல்வி அறிவுடனும், அனுபவத்துடனும் தேசியத்தலைவரின் பணிப்பின்பேரிலும் இப்பணிகள் ஆற்றப்பட்டு, உலக அரங்கில் தமிழர்களின் வரலாறு சான்றுகளுடன் நிறுவப்பட்டிருந்தது. இம்முப்பது இலட்சத்துக்குமதிகமான இவ்வாவணங்களை அவர் நுண்படங்களாகப் பதிவேற்றியுள்ளார் (Microfilm). இவ்வாவாணங்கள் மூவாயிரத்துக்குமதிகமான நூலாவணங்களாக இவ்வாவணக்காப்பகச் செயற்திட்டம் ஊடாக வெளிவரவுள்ளன


2009
ஆம் ஆண்டு ஏற்பட்ட எமது இனத்தின் பெரும் பின்னடைவிற்குப் பின்னர், நாங்களும் பெரும் வலியுடன் மேற்கொண்ட திண்ணம், சமய அடையாளத்தைக் கடந்து, எமது வரலாற்றை, எமது வலியை எமது அடுத்த தலைமுறைக்கு உரிய முறையில் வழங்க வேண்டும் என்பதாகும். இனவிடுதலையின் வேட்கையை, இனத்தின் தோற்றம், பரவல், வாழ்வியல் முறையை உரிய சான்றுகளுடன் பகர நாங்களும் முயன்றோம்.


2016
ம் ஆண்டு 10ம் மாதம் திபேத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா அவர்கள் பல்சமய இல்லத்திற்கும், அதற்கு அடுத்து எங்கள் திருக்கோவிலிற்கும் வருகை அளித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் புலப்பெயர்வு தொடர்பாக பேசும்போது, தமிழர்கள் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து இலங்கைக்குச் சென்றனர் எனும் தவறான செய்தியை அவர் உரைக்க அந்த இடத்தில் நாங்கள் எமது மறுப்பினைப் பதிவுசெய்து, அவர் கருத்தை திருத்த நேர்ந்தது. இதுவே எங்கள் வரலாற்றை உரிய முறையில் யாவரும் அறியச் செய்ய வேண்டும் எனும் வேட்கையினை எமக்கு ஏற்படுத்தியது.


முருகர் குணசிங்கம் அவர்கள் சேகரித்த முப்பதுலட்சத்திற்கும் மேற்பட்ட இவ் ஆவணங்களை நூல்களாகப் பதிப்பெடுத்து ஒரு இடத்தில் திரட்டி தமிழர் ஆவணக்காப்பகம் அமைக்க உள்ளோம்.


இங்கு தமிழர் களறி என எம்மால் பெயரிடப்பட்டுள்ள இவ் ஆவணக்காப்பகம் நூலகம் அமையும்போது எமது இளந்தமிழ்ச்செல்வங்கள் தங்கள் வேரையும் விழுதையும் அறியும் அதேவேளை இந்நாட்டவர்களும் பிறரும் எமது வரலாற்றை கற்றுணர பொருத்தமாக தமிழர் களறி அமைகிறது.


சைவநெறிக்கூடத்திற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட தமிழ்வழிபாட்டுத் திருக்கோவில் திருப்பணிச்சுமைகள் இருக்கும் வேளையிலும் தமிழர் களறி பணிகள் தொடங்கப்பெற்று மிகுந்த வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நூல்கள் பதிப்பிற்கும் இறக்குமதிக்கும், நூலகத்தளபாடங்களின் செலவிற்கும் பெரும் பணம் தேவையாக உள்ளது. பருமட்டான செலவுத்திட்டத்தினை இணைப்பில் உள்ள இதழில் காணலாம்.


எங்களுக்குள்ள பொருளாதார நெருக்குதல்களையும்தாண்டி இப்பணியினை மேற்கொள்வது  காலம் எமக்காகக் காத்திருக்காது எனும் எண்ணதால் மட்டுமே. இறையாண்மையுள்ள அரசு செய்யவேண்டிய இப்பணியினை நாங்கள் தனித்து முன்னெடுப்பது என்பது மிகவும் கடினமானதாகும். எங்கள் இனவிடுதலைப்போரில் பின்னடைவு ஏற்படாது இருந்திருந்தால் இப்பணியினை தேசியத் தலைவரே முழுமையாகச் செய்துமுடித்திருப்பார்


இக்கட்டான இவ்வேளை அனைத்து தமிழ் அமைப்புக்களின் பங்களிப்பும் ஆதரவும் தமிழர் வரலாற்று ஆவணக்காப்பகத்தை நிறுவத் தேவையாக உள்ளது.


கேள்விகள் இருப்பின் மேலதிக தகவல்கள் தேவைப்படின் பதில் அளிக்க என் நேரமும் நாங்கள் விருப்புடன் (0041 78 697 70 25) உள்ளோம்.


உங்கள் முழுமையான பங்களிப்பனையும் ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம்.


உங்கள் புரிதலிற்கும் ஒத்துழைப்பிற்கும் எமது நன்றிகள்.

 

அன்புடன்
சைவநெறிக்கூடம்

0041 31 302 09 56